நிர்குணம்


சகுண பிரம்மம், நிர்குணபிரம்மம் என்பது அடிக்கடி காதில் விழும் வார்த்தைகள். இறைவனை நிர்குணனாகக் காண்பதே முறை. அவனுக்குக் குணங்கள் இருப்பது போல் காட்டுவது கற்பிதம் என்பது போல் பேசக்கேட்டிருக்கிறேன். அதே நேரத்தில் இப்படிப் பேசுவோரே பஜனை, உற்சவமென்றால் வரிந்து கட்டிக்கொண்டு கலந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன். கோயிலுக்குப் போனால் ஒரு சந்நிதி விடாமல் (சண்டிகேஸ்வரர் உட்பட) வழிப்பட்டு, ஸ்வாமிக்கு ஒன்று, அம்பாளுக்கு ஒன்று என்று அர்ச்சனை செய்துவிட்டு வருவதையும் காண்கிறேன். இறைவன் குணமற்றவன் எனில் ஸ்வாமி ஏது? அம்பாள் ஏது? சண்டிகேஸ்வரர் ஏது? பூஜை புனஸ்காரம் எதற்கு? பஜனை எதற்கு? உற்சவம் எதற்கு? இவையும் கற்பிதமா? பரபிரம்மம் நிர்குணம் எனில் இந்த வாழ்வே கற்பிதமா?

இதெல்லாம் கூடப்பரவாயில்லை, பரபிரம்மம் நிர்குணம் என்று சொல்வோர் கடவுள் இல்லை என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றனர். நிர்குணம் என்றால் இல்லை என்றுதானே பொருள். அப்படியெனில் நிர்குணம் என்போர் நாஸ்திகர்கள் என்று விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஏதடா! பெரிய வம்பாய் போய்விட்டதே! என்று நினைத்தேன்.

பின் யோசித்ததில் நிர்குணம் என்பதை அப்படிப் புரிந்து கொள்ளுதல் தவறு என்று உணர்ந்தேன். சூரிய ஒளி வைரக்கல்லில் பட்டு, நிறப்பிரிகையாகி வர்ணஜாலங்களில் ஜொலிக்கிறது. ஆனால் அதே வர்ணங்கள் வெள்ளை எனும் ஒரு வர்ணத்தில் அடங்கவும் செய்கின்றன. 3000 வருடங்கள் வாழக்கூடிய பெரிய மரங்கள் உலகில் உள்ளன. ஆனால் அவை விதையாய் இருக்கும் போது ‘இத்துணூண்டாக உள்ளன. ஒரு சிறிய விதைக்குள் ஒரு ஆலமரமே உட்கார்ந்து கொண்டுள்ளது. எனவே விதையை மரமில்லை என்று சொல்லமுடியாது. விதைதான் மரம். ஆனால் அடங்கி இருக்கிறது. வாமனனாக இருக்கும் போது இறைவன் தன்னை அடக்கி வைத்திருக்கிறான். பெருக்கும் போது விராட் புருஷனாக அகிலம் அளக்கிறான்!

அப்படியெனில் நிர்குணம் என்பது குணமற்ற தன்மையன்று. குணங்கள் பரிமளிக்காதநிலை என்று பொருள். ஒருவன் தெருவில் நின்று கொண்டு இறைவன் நிர்குணன் எனவே ‘கடவுள் இல்லை’ என்கிறான். கடவுள் ‘இல்லை’ என்று ‘ஒருவன்’ சொல்லும் வரை கடவுள் உள்ளார் என்று பொருள் கொள்ளலாமே! இருப்பதைத்தானே ‘இல்லை’ என்று சொல்லமுடியும்? இல்லாததை ‘இல்லை’ என்று எப்படிச் சொல்லமுடியும்? [இல்லை என்று சொல்ல ஒருவன் தேவைப்படுகிறதே!] எனவே நிர்குணம் என்று சொல்லை நிர்மாணிக்கவே ‘குணம்’ தேவைப்படுகிறது. எனவே நிர்குணம் என்பதும் அவனது கல்யாண குணங்களில் ஒன்று என்று கொள்வதே சாலப்பொருந்தும். திருவரங்கனைப்பற்றிப்பேசும் ‘ஸ்ரீரங்கநாத கத்யத்தில் ஸ்ரீராமானுஜர் இறைவன் ‘குணகணம்’ என்கிறார். கட்டுக்கட்டாக அவனது குணங்கள் மண்டிகிடக்கின்றனவாம். இறைவனது குணங்களை யாரறிந்து சொல்ல வல்லார்? கட்டுக்கடங்காத குணக்கள் உடையவன் அவன். நிர்குணம் என்பதும் அதிலொன்று. இப்படி எடுத்துக் கொள்ளமுடியுமா? என்று கேட்டால், அப்படிப்பார்ப்பதே உசிதம் என்று சொல்கிறது திருவாய்மொழி!

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

(உளனெனில் அவனுருவம் இவ்வுருவுகள்; உளனலனெனில் அவனருவமிவ்வருவுகள்.) ஈச்வரனுக்கு உளனாயிருக்குந் தன்மையாவது ஸ்தூலரூபத்தோடுகூடிய சேதநாசேத்நங்களைச் சரீரமாகவுடையனாயிருக்குந் தன்மையேயாம். இனி, இலனாயிருக்குந் தன்மையாவது ஸூக்ஷ்மரூபத்தோடு கூடிய சேதநாசேதநங்களைச் சரீரமாகவுடையனா யிருக்குந்தன்மையேயாம். உபநிஷத்தில் *அஸத் வா இத மக்ர ஆஸீத்* என்று ஓதப்பட்டுள்ள இடங்களில் ஸூக்ஷ்மசிதசித் சரீரகத்வமே அஸதத்வம் என்று நிர்ணயிக்கப்படுவதாகத் தேறுதலால் அதனை அடியொற்றி ஆழ்வார் உள்ளனவெனில் அவனருவமிவ்வருவுகள் என்றருளிச்செய்தாரென்க. ‘ஈச்வரனுண்டு என்றால் ஸ்தூலரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விவக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்மரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்மருப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விசக்ஷிதம்; ஆக இவ்விரண்டு வகைதவிர அடியோடு சூந்யத்வமென்பது எவ்வழியாலும் ஏற்படாதென்றதாயிற்று.

பின்னடிகளின் கருத்தாவது உளன் என்ற ப்ரதிஜ்ஞையாலே உண்மை ஏற்படுகிறது; இலன் என்ற ப்ரதிஜ்ஞையாலே இன்மை ஏற்படுகிறது. உண்மையாவது அஸ்தித்வம்; இன்மையாவது நாஸ்தித்வம்: இவ்விரண்டு தருமங்களும் ஒரு பொருளை ஆச்ரயித்தேயிருக்க வேண்டுதலால் நாங்கள் சொல்லுகிற அஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும், நீ சொல்லுகிற நாஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும் ஒரு வஸ்து தேறும்? என்று ஆக்ஷேபிக்க முடியாது; ஏதோவொரு வஸ்துவைச் சுட்டித்தானே நாஸ்தி யென்னவேண்டும்; அப்படி நாஸ்தி என்று நீ சொல்லுகிற வஸ்து எது? என்று கேட்டால் அப்போது அதனை நீ நிரூபித்தேயாக வேண்டுமே; ஆனது பற்றியே நாஸ்தித்வத்திற்கு ஆசரயமாகவும் வஸ்துவினுண்மை ஸித்தித்தே தீருமென்கிறோம். அப்படி ஸித்திக்குமாதலால் ஸர்வதேச ஸர்வகால வ்யாபியான எம்பெருமான் ஸவிபூதிகனாய் ஸித்தித்தானாயிற்று என்றதாம்.

English Translation

Would you say he is, then he is, and all this is him. Say he is not, then too he is, as the formless spirit in all. With the twin qualities of being and non-being, he pervades all things and places forever.

இப்படி விளங்கிக்கொண்டால்தான் இப்பிரபஞ்சத்தை நாம் புரிந்து கொண்டவராவோம். ஒன்றுமேயில்லாத சூன்யத்திலிருந்து ஒன்று பிறக்காது. எல்லாம் அடங்கிய ஒன்றிலிருந்து பல பிறக்க சாத்தியமுண்டு. ‘உலகமுண்ட பெருவாயா’ என்பதும், உலகமுண்டு ஆலிலையில் ஓர் குழந்தை தவழ்கிறது என்பதும் இதைச் சுட்டவே! இறைவனை வேற்று மதத்தினர் யாரும் ‘குழந்தையாக’ பார்ப்பதாகத் தெரியவில்லை. ‘குழந்தை’ என்றால் ‘வித்து’ என்று பொருள்.

இதைத்தான் Powers of Ten எனும் விழியம் விளக்குகிறது:

0 பின்னூட்டங்கள்: