Thoughts on Airtel Super Singer Junior (SSJ3) Finals

நான் சிறுவனாக வளர்ந்த ஊரில் கோரக்கன் கோயில் என்றொன்றுண்டு. ஆசையாக வளர்த்த கடாவை அங்கு கொண்டு வந்து கோரக்க சித்தருக்கு காணிக்கையாக வெட்டுவார்கள். பார்க்க பரிதாபமாக இருக்கும். ஏனோ, இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 குழந்தைகளைப் பார்க்கும் போது இது நினைவிற்கு வருகிறது. பாருங்களேன், பிரகதி, சுகன்யா இருவரும் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர்கள். சுருதி சுத்தமாகப் பாடக்கூடியவர்கள். ஆனால் நேற்று சென்னையின் ஏதோவொரு மாலில் கட்டுக்கடங்காத ஒரு கூட்டத்தின் முன்னிலையில், ‘பாடு’ என்று சொன்னபோது, இத்தனை நாள் கற்ற வித்தையும் காற்றில் பஞ்சாய் பறக்க. ஒருவருக்கு மேல் ஒருவர் என்று இத்தனை நாள் மெருகேற்றி வந்த இசை, ‘இவளுக்கு நான் என்ன குறைச்சல்’ எனும்படி படுமோசமாகப் போனது. நேற்றுப்பாடிய ஐவரில், யாழினி மட்டும்தான் ஏதோ சுமாராகப்பாடினார். ஏன் இந்த பலிகடா விளையாட்டு? பாவம்! இவர்கள் ஒரு contained environmentல் தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்து கற்றுத்தேறி, தேர்ந்த மூன்று நடுவர்களின் கூர்மையான பார்வையிலும், ஒரு தேர்ந்த குரல் விற்பன்னரின் கண்காணிப்பிலும் பாட்டுப்பாடி திறமை வளர்த்துவிட்டு, இவையெல்லாம் எதற்கு என்றால், இசை ஞானம் அதிகமற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இராகம், பேதமற்ற வெறும் ‘குத்துப்பாட்டு’ பாடத்தான் என்றால், something is terribly wrong! என்று எண்ணத்தோன்றுகிறது. சென்ற பருவத்திலும் இப்படித்தான் சத்ய பிரகாஷ், பூஜா, சந்தோஷ், ஸ்ரீநிவாஸ் இவர்களெல்லாம் படிப்படியாய் முன்னேறி வந்த பின் திடீரென்று பொதுமக்களின் ஓட்டுக்கு மன்றாடு என்று force செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. They miserably failed! 

இசையின் நுணுக்கமறிந்த ஒரு சூழலில் உருவாக்கப்பட்ட ஒரு தேர்வை கட்டக்கடைசியில் ஒன்றுமே அறியாத பொதுமக்கள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயமென்ன? புரியவே இல்லை!பொதுமக்களுக்கான இசை, எனவே பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமென்று சொல்லமுடியாது. ஏனெனில் அந்த மெல்லிசையை அவர்களுக்கு அளிக்கும் composers களுக்கு நல்ல இசை ஞானம் உண்டு. இளையராஜா தன்னை ‘இசை ஞானி’ என்று சொல்லிக்கொள்கிறார். ஏ.ஆர்.ரகுமானுக்கு கர்நாடக, ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நன்றாகத்தெரியும். அவர்களோடு பணிபுரியத்தான் இக்குழந்தைகள் தயார்படுத்தப்படுகின்றனர். பொது மக்களுக்கான இசை மேடையில் பாட இவர்கள் தயார்படுத்தப்படவில்லை.

மக்கள் ஓட்டுப்போடும் போது ஏர்டெல் கம்பெனிக்கு வருமானம் வருகிறது! என்று சொல்லலாம். உண்மை என்னவெனில், ஒரு வருடமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் ஏர்டெல் இந்த ஒரு நாள் ஓட்டு தரும் வருமானத்தை நம்பி செயல்படவில்லை. 10 லட்சம் ஓட்டு என்றால், அனைத்தும் ஏர்டெல் சம்பாத்யம் என்று கொள்ள முடியாது. இணையம் மற்றும் வேறு, வேறு கம்பெனிகளுக்கு வருமானம் பிரிக்கப்படுகிறது என்பதே உண்மை. மேலும் விஜய் டிவி இவ்வளவு மூலதனம் போட்டு இதை நடத்துவதற்குக்காரணம் இந்நிகழ்ச்சியின் பாப்புலாரிடியை வைத்து வரும் விளம்பர வருமானம் என்பதைக் குறிவைத்தே! எனவே it makes no sense to throw the final performance to public voting!

இப்படி பொதுமக்கள் பார்வைக்கு என்று வருவதால் சின்னக்குழந்தைகளுக்கு ’மேக் அப்’ அது இதுவென்று போட்டு, ‘பிஞ்சிலே பழுக்க வைக்க முயல்கிறார்கள். பாவம், கௌதம் எனும் கிராமத்துச் சிறுவனின் அழகே அவனது தமிழ்ப் பண்பாடுதான். அவனது கூச்சம், மரியாதை, வெகுளித்தனம் இவை கூடிய திறமை இதுதான் அவன் முத்திரை. அவனை மாலில் வைத்து அங்குள்ள இளம் பெண்களுக்கு பிளையிங் கிஸ் கொடு என்று பாவனா சொல்லிப்பழக்குவது கொஞ்சம் வக்கிரமாகப்பட்டது! இதே போல்தான், கட்டுபட்டியான முஸ்லிம் குடும்பத்திலிருந்து வரும் ஆஜீத்தை இப்போது காதலிக்கு எப்படி propose செய்வது என்று பழக்கப்படுத்துவது குட்டிக்குழந்தைகளின் மனதில் வக்கிர எண்ணங்களைப் புகுத்துவது போல் படுகிறது. ஆஜீத்தின் அம்மா, கல்யாணம் ஆகும் சில கணங்களுக்கு முன்புவரை தன் கணவன் யாரென்று தெரியாமல்தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஒரு தலைமுறையில் இத்தனை மாற்றமா? இது எதற்காக? விஜய் டிவி இதை ஏன் முனைந்து செய்ய வேண்டும்?

ஒருவகையில் இந்நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகளின் பாடும் திறம் கண்டுபிடிக்கப்பட்டு சினிமா தொழிலுக்கு நல்ல பாடகர்கள் கிடைக்கிறார்கள் என்பது உண்மை. இந்நிகழ்ச்சி பார்ப்பதன் மூலம் நடுவர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் இசைத்திறன் வளர்கிறது என்பதும் உண்மை. இவ்வளவிற்கும் ஈடாக மேலே சொன்ன விஷயங்கள் காவு கொடுக்கப்படுக்கின்றன? இங்குதான் கர்நாடக சங்கீத பாரம்பரியத்திற்கும், சினிமாப்பாரம்பரியத்திற்குமுள்ள வித்தியாசம் அப்பட்டமாகத்தெரிகிறது. கர்நாடக இசையின் சாகித்ய கர்த்தாக்கள் இறைவனுக்காகப் பாடினார்கள். ஆன்ம வளர்ச்சியூட்டும் கீதங்களை உருவாக்கினர். அக்கீர்த்தனைகளைப்பாடும் போது மனது சுத்தமாகிறது, ஆன்மநேயம் வளர்கிறது, மனிதன் பூரணமாகிறான். ஆனால் அல்லும் பகலும் கொச்சையான பொருளுள்ள சினிமாப்பாடல்களை இக்குழந்தைகள் பாடும் போது காம இச்சை வளர்கிறது. காமம் உள்ளமெங்கும் குடிபோகிறது. எளிமையே தோற்றமாக இந்நிகழ்ச்சிக்கு வந்து பாடிய சுகன்யா எங்கே? இப்போது அல்ட்ரா மாடர்னாக டிரஸ் செய்து கொண்டு குத்துப்பாட்டு பாடும் சுகன்யா எங்கே? இழந்தது எது? She lost her innocence!

நிறைய யோசிக்க விஷயமுள்ளது.

0 பின்னூட்டங்கள்: