இந்தியத் தமிழர்கள் மத்தியில் குறள் புரிதல்!

தமிழ்கூறும் நல்லுலகு உலகம் விரிந்து, பரந்து கிடந்தாலும் அங்கு தவழ்கின்ற தமிழ் வேறுபாடுடையதாய் உள்ளது. மலேசியாவையே எடுத்துக்கொள்வோம். இங்கு 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தமிழ் சொல்லித்தரப்படுகிறது. மிக நன்றாகவே சொல்லித்தரப்படுகிறது என்பதற்கு நான் கண்ட நல்ல தமிழ் ஆசிரியர்களே சாட்சி. ஆயினும் தமிழின் இலக்கிய ஆளுமை என்று வரும் போது தமிழின் தாய் மண்ணான இந்தியாவிற்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. மிக நல்ல உதாரணம் இந்த நீயா, நானா கலந்துரையாடல். இளைஞர்களிடம் திருக்குறள் உணர்வு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அற்புதமான நிகழ்ச்சி இது. நாம் நினைக்கின்ற அளவு தமிழகத்தில் தமிழ் மடிந்துவிடவில்லை. குறளின் சுவையறியும் வண்டுகள் இன்னும் ரீங்காரித்துக்கொண்டுதான் உள்ளன எனத்தெரிகிறது! மலேசியாவிலும் திருக்குறள் பற்றிய வாட்ஸ்அப் குழுமங்கள் உள்ளன. ஆயினும் இந்நிகழ்ச்சியில் காணும் அளவிற்கு அது பொலிவுடன் திகழவில்லை. காரணம் பலருக்கு வள்ளுவன் மேல் வந்த பிடிப்பு பள்ளியில் சொன்னதை வைத்தோ அல்லது இனவாதக் குழுமங்கள் சொன்னதை வைத்தோ எழுவதே!. பொதுவாக மலேசிய இலக்கியம் என்று பேசும் போது மு.வ காலத்தை அது தாண்டவில்லை என்றொரு குற்றச்சாட்டு வைக்கப்படும். முனைவர். ரெ.கார்த்திகேசு போன்றோர் மலேசிய இலக்கியத்தை அலசி ஆராய்ந்து விதிவிலக்குகளை எடுத்துக்காட்டினாலும் அவை விதிவிலக்குகள் மட்டுமே. ஒரு சாதாரணத்தமிழனுக்குத் தெரிந்த இலக்கிய நூல் திருக்குறள் மட்டுமே. அரசியல்வாதிகள் கூட இங்கு தேவாரம் சொல்லித்தான் பேசுகின்றனர். ஆயின் பலருக்கு ஆழ்வார்கள் என்றால் யாரென்று தெரியாது. சமண இலக்கியங்களின் பங்களிப்பு பற்றித்தெரியாது. சீறாப்புராணம் பற்றித் தமிழ் முஸ்லிம்களே பேசுவதில்லை. ஏனெனில் அவர்கள் மலேய் மக்கள் போல் தமிழை விட்டு தேசிய மொழிக்குத் தாவவே முயல்கின்றனர். இச்சூழலில் நான் திருக்குறள் என்றால் ஏன் காமத்துப்பாலைப் பற்றிப் பேசுவதில்லை என்று கேட்டுவிட்டேன். அவ்வளவுதான்! ஏதோ நானொரு ஈனப்பிறவி போல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். :-) இந்த நீயா, நானா பார்த்தாலாவது அவர்களுக்குப் புரியும் திருக்குறளே பக்தி இலக்கியங்களின் ஊற்று. அதற்கு மிக முக்கியமான நாயகி பாவம் என்பது வள்ளுவனில் தொடங்குகிறது என்று. வள்ளுவன் பெண்ணாக இருந்துதான் இன்பத்துப்பாலை எழுதுகிறான். ஒரு இளைஞர் சொன்னது போல் நாம் திருக்குறளை இன்பம் தரும் காமத்துப்பாலிலிருந்து தொடங்கி அந்த இன்பத்திற்கு பொருள் முக்கியம். அப்படி ஈட்டும் பொருள் அறன் வழிப்பட்டு இருந்தால் நிற்கும். இல்லையெனில் அறனும், பொருளும், காமமும் எல்லாம் போய்விடுமென்று சொல்லத்தோன்றுகிறது! காமத்துப்பால் ஒன்றுதான் தமிழின் ஆகச்சிறந்த அகம் என்பதை விளக்குகிறது இந்நிகழ்ச்சி! இந்த அகத்துறையே பிற மொழிகளிலிருந்து தமிழைத் தனித்துக்காட்டுகிறது. இந்த இளைஞர்கள் காமத்துப்பாலை எப்படி லாவகமாகக் கையாளுகின்றனர்! மலேசிய இந்தியர்களோ காமத்துப்பால் என்றால் வெறும் செக்ஸ் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். என்ன பேதமை? வள்ளுவனின் மேதமை காண இன்பத்துப்பாலே சாட்சி! அங்குதான், ஓர் மனிதன் வளர்த்து எடுக்க வேண்டிய மென்மையான உணர்வுகள் பற்றிய குறள்கள் அதிகமாயுள்ளன. மனிதனைப் பிற விலங்கிலிருந்து பிரித்துக்காட்டும் 'காதல்' எனும் உணர்வு பற்றிய தெள்ளிய புரிதல் அங்குள்ளது. இதைப் புரிந்து கொண்டால்தான் பிற்காலத்தில் வளர்ந்து செழித்த பக்தி என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்! மலேசியத்தமிழர்களிடம் காணும் வேடிக்கையான போக்கு என்னவெனில், திருக்குறள் சமயம் சாராத நூலென்னும் புரிதல். அதாவது, வள்ளுவன் எச்சமயம் பற்றியும் பேசாததால் அது சமயச் சார்ப்பற்ற நூல் என்பது. உண்மையில் திருக்குறள் வள்ளுவன் காலத்தில் இயங்கிய அனைத்துச் சமயக்கருத்தையும் அழகாய் சொல்கிறது என்பதே உண்மை. அதன் சிறப்பம்சத்தை எடுத்துக்காட்டுவது வள்ளுவம்!. இன்னொரு வேடிக்கை அது சமயச்சார்பற்ற நூல் எனவே வள்ளுவமே சமயம் என்று கருதும் போக்கு. இதுவுமோர் முரண். The pope is infallible என்பார்கள் அது போல் வள்ளுவன் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் என்று சில தீவிர வள்ளுவ பக்தர்கள் கருதுகின்றனர். அவர்கள் வள்ளுவனின் காமத்துப்பாலை படித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் வள்ளுவனின் கவித்துவமே, அதன் அழகியலே அங்குதான் பிறக்கிறது! அடுத்து வள்ளுவம் ஓர் மறை, அதாவது பொதுமறை என்று நம்புகிறார்கள். பொது மறை ஏனெனில் அது சைவம், வைணவம் என்று எது பற்றியும் தெளிவாய்ச் சொல்லவில்லை, ஆயின் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற பிற மதங்களும் கொண்டாடும் அளவில் உள்ளது என்பது. அது சரிதான். ஆனால் எந்த மறையிலும் காமம் ஒரு அங்கமாக வைத்துப் பேசப்படவில்லையே? களப்பொருள் எழுதியவன் இறைவன் என்று தமிழ்ச் சமயங்கள் மட்டும்தானே பேசுகின்றுன! குரவைக்கூத்து என்று பரமாத்மா, ஜீவாத்மா தத்துவத்தைக் காமம் கொண்டு விளக்குவது திருமால் நெறிதானே! ஆனால் இவர்களால் பரிமேல் அழகர் உரையைக் கூட தாங்க முடியவில்லை. ஏனென்றால் பரிமேல் அழகர் ஐயராம்! என்ன பேதமை! எனவே இவர்கள் பேசும் பொதுமறை என்பது வள்ளுவனின் ஒரேயொரு பால் கொண்டு பேசுவது. அது அறத்துப்பால் மட்டும். பின் ஏன் வள்ளுவன் முப்பால் எழுதினான்? அறம், பொருள், இன்பம், வீடெனும் நான்கில் வீடுபேறைப் பற்றிப் பேசவே இல்லையே அவன்? பின் எப்படி அது மறையாகும்?

எப்படியோ, இந்த நீயா, நானா இப்படியெல்லாம் சிந்திக்க வைத்துவிட்டது!


0 பின்னூட்டங்கள்: