இராமானுஜர் சின்னத்திரைத் தொடர்உடையவர் என்றும், யதிராஜர் என்றும், எம்பெருமா்னார் என்றும் தமிழ் வைணவர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஶ்ரீராமானுஜர் சரிதம் கலைஞர் தொலைக்காட்சியில் 195 கதையமர்வுகளை (episode) தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு தமிழ் சமயப்பெரியவர் கதையை மேனாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு நாடகமாகச் சொல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இவர் தன்னை நாத்திகர் என்று உலகறியப் பறை சாற்றியவர். எனவே, இவர் சரிதத்தைத்திருத்தி எழுதப் போகிறார் என்று சமய உலகம் பயந்த வேளையில் மிகத்திறமையுடனும், நேர்மையுடனும், கதை சொல்லும் நேர்த்தியுடனும் 195 அமர்வுகளை எடுத்துச் சென்றிருக்கிறார் எனில் பாராட்ட வேண்டிய விஷயம்.

இராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே அவரைக் கொல்லும் அளவிற்கு பரம விரோதிகளாய் இருந்தோரையும் அன்பால் மனதை மாற்றியவர் ஶ்ரீராமானுஜர். அதனால் அவரை, "மொய்ம்பால் இதத்தாய் ராமானுஜன்" என்று அழைப்பர். எனவே அவர் சரிதம் கலைஞர் தொலைக்காட்சிக் கலைஞர்கள் கையில் மிளிர்வது ஆச்சர்யமில்லை. எதனை எவர் கொண்டு எப்படி சாதிப்பிது என்பது பார்த்தசாரதியான பெருமாளுக்குக் கைவந்த கலை அல்லவோ!

எல்லா சாதியினரையும் அரவணைத்து, வேதம் சொல்லித்  தனித்திருந்த பார்ப்பனரைத் திருத்தி அடியார்க்குப் பணி செய்ய வைத்து ஒரு சமதர்ம சமுதாயத்தை தமிழ்ப் பாவலர்களான ஆழ்வார்களின் வழியில் செய்வித்தவர் ஶ்ரீராமானுஜர். அதனால்தான் இவரைப் பகுத்தறிவுப் பாசறையிலிருந்த பாரதிதாசனுக்குப் பிடித்துப் போயிற்று. தமிழகம் செய்த அருந்தவப்பயன் ராமானுஜன் என்று சொன்னவர் பாரதிதாசன். அவர் வழி வந்த மு.கருணாநிதி இன்று ராமானுஜ திவ்ய சரிதத்தை நேர்த்தியாக சின்னத்திரைக் காவியமாக்கி வருகிறார்.

உண்மையிலேயே குட்டி பத்மினி, தனுஷ் குழுவினரைப் பாராட்ட வேண்டும். இங்கொன்றும் அன்கொன்றுமாக உள்ள ராமானுஜ குருபரம்பரைக் கதைகளைக் கோர்த்து, விட்டுப் போன இடங்களைக் கலை நயத்தோடும், கற்பனைத்திறனோடும் நிவர்த்தி செய்து, வைணவ ஆச்சார்யர்கள் எது, எதை உயிர்க்கும் மேலான கொள்கைகள் என்று,சொன்னார்களோ அதைத் தவறாமல் எல்லோர்க்கும் உரைத்தும் செவ்வனே சின்னத்திரைக் காவியமாக்கியுள்ளனர்.

மேனாள் முதல்வருக்கு எத்தனையோ பாராட்டுகள் கிடைத்திருக்கலாம், ஆனால் திருப்பதி தேவஸ்தானம் இறங்கி வந்து (அதாவது மலையிலிருந்து!) அவரைப் பாராட்டி, இத்தொடரை அவர்கள் செலவில் தெலுங்கு மொழியில் மீளொளிபரப்பு செய்யலாமா? எனக் கேட்டது நிச்சயம் மகிழத்தக்க பாராட்டு என்றே கொள்ளலாம்.

இராமானுஜர் அப்படி என்னதான் செய்துவிட்டார்? இதையறிய தாங்கள் என் பாசுர மடல்களை வாசிக்க வேண்டும். எனது வலைப்பதிவான ஆழ்வார்க்கடியானுக்குச் செல்ல வேண்டும்!

சரி, இத்தொடர் ஆன்லைனில் காணக்கிடைக்குமா? பல இடங்களில் ஒளிப்பரப்பாகிறது. உதாரணத்திற்கு ஒன்று இங்கே!

என்னை ஆச்சர்யப்படுத்தியது எனது சகோதரி கமலாவின் இரண்டாவது புதல்வன் நாராயணன் இதில் ஆளவந்தாரின் இரண்டாவது புத்திரனாக நடித்திருப்பது! கதை மாந்தர் தேர்வு பாராட்டும் வகையில் உள்ளது. இயல்பான பேச்சு நடையில் கதையை ஓட்டியிருக்கலாம். பலருக்கு தமிழ் உச்சரிப்பு தடுமாறுகிறது. குறிப்பாக "ள"கரம்!